Sunday, 8 December 2013

அன்னதானம்

SUNDAY, 1 DECEMBER 2013

அன்னதானம்

கி.பி. எட்டாம் நூற்றாண்டு.மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம்.நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார்.
பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது.வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான்.திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.
அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.ஒரு நாள்,  வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார்.
அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல, சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து, அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு, அருள்பாலிக்க அழைக்கின்றார்.வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார்.
சிறுத்தொண்டர், தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.அனைவரும் அதிரும் வண்ணம், வைரவர், 'நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க, தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்?
கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர். வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார். 
இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை, ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும், செல்வ மகனை, ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.
பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்துவருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையைக் குளிப்பாட்டி, அழகு செய்து, அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை.
நங்கை கால் பிடிக்க, சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர, குழந்தைக் கறி செய்கின்றனர்.இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார்.வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் சொல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார்.
அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார். வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார்.
வைரவர் மேற்கொண்டு, சிறுத்தொண்டரை நோக்கி, உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.
தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால், இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, 'அவன் உதவான்' என்கின்றார்.வைரவரோ, 'இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.நிலைதடுமாறி, வாசலில் நின்று 'சீராளா' என்கின்றார்.மகன் எப்படி வரமுடியும்? வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார்.அவரும் தலைவாசல் வந்து 'சீராளா' என்கின்றார்.
அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், 'அப்பா, அம்மா' என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து, மகிழ்ந்து உள்ளே வர, அங்கே இருந்த உணவையும், வைரவரையும் காணவில்லை.
சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள்.
அனைவரும் நற்கதி பெற்றனர்.
.....
கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?
சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல, அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.

(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர்.

அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.

கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர்.

அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர்.

அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.

அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!

No comments:

Post a Comment